கராச்சி: ‍தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றியை விரைவாக நெருங்கி வருகிறது பாகிஸ்தான் அணி. குறைந்த ரன்களே இலக்காக இருப்பதால், விக்கெட்டுகள் சிலவற்றை இழந்தாலும், பாகிஸ்தான் எப்படியும் வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்கா. கராச்சியில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில், டாஸ் வென்று முதலில் களமிறங்கியது தென்னாப்பிரிக்க அணி.

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 220 ரன்கள் மட்டுமே எடுக்க, பாகிஸ்தானோ 378 ரன்களை விளாசியது. இந்நிலையில், 158 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா, துவக்கத்தில் வலுவாக இருந்தாலும், பின்னர் அப்படியே சரியத் தொடங்கியது.

மொத்தமாக 245 ரன்களுக்கு, இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது. பாகிஸ்தானின் நெளமன் அலி 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

எனவே, இரண்டாவது இன்னிங்ஸில் 88 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத்துவங்கிய பாகிஸ்தான், தற்போதைய நிலையில், 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 1.5 நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், அந்த அணி எளிதாக வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.