சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக பிரச்சனை எழுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், ஆளுநர் தனது உரையை வாசிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளுநர் உரையுடன் கூடிய கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதுடன் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள கூட்டத் தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த கூட்டத்தொடரை தங்களுக்கு சாதகமாக எதிர்கட்சியான அதிமுகவும் பாஜகவும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும், கொலை, கொள்ளை, போதை பழக்கம் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப தயாராக உள்ளது.
மேலும் பல்வேறு துறைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்தவுடம், அதை மறுக்கும் பட்சத்தில், அமளியில் ஈடுபடவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று திமுக அரசு கொடுக்கும் ஆளுநர் உரையை கவர்னர் வாசிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையின் போது ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் பல வரிகளை வாசிக்காமல் தன்னுடைய கருத்துக்களை சேர்த்து பேசினார். அதில், பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் வாசிக்காமல் புறக்கணித்தார். இதற்கு அப்போதே முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அவர் முன்னிலையிலேயே வாசிக்கப்பட்டது. இதன் காரணமாக உடனடியாக கூட்டத்தில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.
இதனையடுத்து 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அளித்த உரையை வாசிப்பதை தவிர்த்த ஆர்.என்.ரவி, தேசிய கீதம் குறித்த சில கருத்துக்களை மட்டும் தெரிவித்து விட்டு உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி இருக்கையில் அமர்ந்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு உருவானது.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையை தமிழில் வாசித்தார். இதே போல் 2025, இந்த ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் சட்டசபை தொடங்கிய போது சட்ட சபையில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட தால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதனால் ஆளுங்கட்சிக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் ரவி கலந்து கொள்ள சம்மதம் அளித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா? அல்லது வேறு ஏதாவது கருத்து தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த கூட்டத்தொடர் அதிக பட்சமாக 4 நாட்கள் வரை டத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி முதல் வாரம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]