புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.

கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளையொட்டி ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையிலான அதிகாரிகள், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். இதைக்கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தச்சங்குறிச்சியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், இன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் பகுதியில் கூடுதல் நார்கள் கொட்டப்பட்டன. மேலும் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்குகிறது.