அரசு பணியில் முதல் தலைமுறை  பட்டதாரிகளுக்கு முன்னுரிமை : முதல்வர் அறிவிப்பு

Must read

சென்னை

நேற்று நடந்த மனித வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை தரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மனித வள மேம்பாட்டுத் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது.  இதில் நிதி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைச் செயலாளர் ச.கிருஷ்ணன், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது உரையில்  ”அரசு அலுவலர்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.  தமிழக மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும்,

மத்திய, மாநில அரசுப் பணிகள் தொடர்பான போட்டித் தேர்வுகள், தகுதிகள், தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வைத் தமிழக மாணவர்களிடையே முதலில் ஏற்படுத்த வேண்டும்.அரசுப் பணியிடங்களில்  குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் முன்னுரிமை வழங்க வேண்டும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்துத்துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகள், அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும்,  தவிர அண்ணா மேலாண்மை பயிற்சி மையம், போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகளை உயர்த்த வேண்டும். மேலும் பவானி சாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தில் அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்த வேண்டும் ” என அறிவுறுத்தினார்.

 

More articles

Latest article