அதிமுக அமைச்சர் தலையீட்டால் ஆவின் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் இழப்பு

Must read

திண்டுக்கல்

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டால் திண்டுக்கல் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.4.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் தமிழக பா வளர்ச்சித் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வந்தார். அவருடைய  பதவிக்காலத்தில் திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் பல நிர்வாக விவகாரங்களில் இவர் தலையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி அந்நிறுவனத்துக்கு ரூ. 4.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

நேற்று இது குறித்து தமிழக பால் உற்பத்தியாளர் சங்க மாநிலப் பொருளாளர் சம்பத், “தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் ஒன்றியத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 7 வழித்தடங்களில் பால் விற்பனை செய்ய 7 முகவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். முந்தைய அதிமுக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டின் காரணமாக, கடந்த 13.2.2020 முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி 7 முகவர்களும் நிறுத்தப்பட்டு, ஒரு முகவருக்கு மட்டுமே 7 வழித்தடங்களிலும் பால் விநியோகம் செய்ய உரிமை வழங்கப்பட்டது.

இதனால் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.   உரிமம் வழங்கப்பட்ட முகவருக்குக் கொடைக்கானலில் பால் விற்பனை செய்ய லிட்டருக்கு 6 ரூபாய் 25 காசுகள், பழநியில் லிட்டருக்கு 5 ரூபாய் 55 காசுகள், திண்டுக்கல்லில் லிட்டருக்கு 3 ரூபாய் 87 காசுகள் கமிஷன் வழங்கப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட கமிஷனை விட இது லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதல் ஆகும்.

இந்த உயர்வால் நாள் ஒன்றுக்குத் திண்டுக்கல் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் வீதம் மாதத்திற்கு ரூ.12 லட்சம், ஒரு வருடத்திற்கு ரூ.1 கோடியே 44 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக ரூ.4 கோடியே 32 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.    தற்போதைய தமிழக அரசு இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் பழையபடியே ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

 

 

More articles

Latest article