ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர் அருகே உள்ள சிப்காட் பகுதியில் இயங்கி வரும் கெமிக்கல் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், 5 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டம் உருவானது. மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், அத்தொழிற்சாலைகளின் கழிவுகளும் அருகே உள்ள ராசாயன கிடங்கில் கொட்டி வைப்பதை வழக்கமாக உள்ளதால், அதிலிருந்து உருவான புகை பின்னர் புகை மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தொழிற்சாலை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் புகைமூட்டம் அதிகமாக காணப்படுவதால், காலை முதலே வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனை காரணமாக பிற்பகலுக்கு மேல், வாகனங்கள் அப்பகுதியாக செல்ல தடை விதிக்கப்பட்டது.