9 குழந்தைகள் மீது காரை ஏற்றி கொன்ற பா.ஜ. பிரமுகர் மீது வழக்கு பதிவு! பீகார் காவல்துறை நடவடிக்கை

பாட்னா:

பீகாரில் கடந்த சனிக்கிழமை பள்ளிக்குழந்தைகள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த கோர சம்பவத்தின்போது  காரை ஓட்டிவந்தது அம்மாநில பாரதியஜனதா பிரமுகர் என்பது தெரிய வந்தது. அவர்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்து உள்ளது.

பீஹாரின் முஷாபர்பூர் மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி அன்று  அசுரவேகத்தில் வந்த கார் சாலையின் குறுக்கே நடந்து சென்ற பள்ளிக்குழந்தைகள் மீது மோதியது. இதில் 9 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தனர். காரை நிறுத்திவிட்டு, காரை ஓட்டியவர் தப்பிவிட்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில், காரை ஓட்டி வந்தது அம்மாநில பாரதியஜனதா கட்சி பிரமுகர் மனோஜ் பைதா என தெரிய வந்தது.

ஆனால், அவர்மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்து வந்தது.

இதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, பீஹாரில் முதல்வர் நிதீஷ் மதுவிலக்கை அமல்படுத்தியதாக கூறினார்.ஆனால் அவர் கூட்டணி வைத்துள்ள பா.ஜ. பிரமுகர் குடி போதையில் தான் 9 குழந்தைகள் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார் அவர்மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த கோர விபத்துக்கு பீகார் மாநில ஆர்ஜேடி கட்சி தலைவர் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக மனோஜ் பைதா என்ற பாஜக பிரமுகர்மீது போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மனோஜ் பைதாவை கட்சியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்து மாநில பாஜக உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் பாரதியஜனதா ஆதரவுடன் நிதிஷ்குமாரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 9 குழந்தைகள் மீது காரை ஏற்றி கொன்ற பா.ஜ. பிரமுகர் மீது வழக்கு பதிவு! பீகார் காவல்துறை நடவடிக்கை, FIR registered against Bihar BJP leader, Police department said, who killed 9 children by car
-=-