வாழப்பாடி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் சோதனை சாவடியில் காவலர் தாக்கியதால் ஒருவர் மரணம் அடைந்ததால் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த எஃப் ஐ ஆர் விவரம் இதோ.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூர் சோதனை சாவடியில் முருகேசன் என்னும் நபர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்தது.  இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டது.   தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் பெரியசாமி மீது கொலை வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை விவரம் வருமாறு :

இன்று 23.06.2021ம் தேதி காலை 11.00 மணிக்கு ஏத்தாப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் C.குமரன் ஆகிய நான் நிலைய அலுவலில் இருந்தபோது இடையப்பட்டி கிராமம் வில்வனூர் மேற்கு காட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் துரைசாமி மகன் வயது 42 என்பவர் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரினை பெற்று வழக்குப் பதிவு செய்த விவரம் பின்வருமாறு.

அனுப்புதல் 

A.துரைசாமி (42),

த/பெ ஆறுமுகம்,

வில்வனூர் மேற்கு காடு 

இடையப்பட்டி கிராமம்

பெத்தநாயக்கன்பாளையம் T.K.

சேலம் DT.

பெறுநர் 

உயர்திரு.காவல் ஆய்வாளர்,

ஏத்தாப்பூர் காவல் நிலையம்,

ஏத்தாப்பூர்.

அய்யா,

நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது அண்ணன் வெள்ளையன் (எ) முருகேசனுக்கு மனைவி அன்னக்கிளி மற்றும் மகள்கள் ஜெயப்பிரியா மற்றும் இன்னொரு மகள் ஜெயபிரதா மகன் கவிப்பிரியன் ஆகியோர்கள் உள்ளனர். எனது அண்ணன் மளிகைக் கடை வைத்துள்ளார்.

மேற்படி எனது அண்ணனும் எங்கள் ஊரைச்சேர்ந்த சிவன்பாபு  for ஜெயசங்கர் ஆகிய மூன்று பேரும் 22.06.2021ம் தேதி சொந்த வேலை காரணமாக ஹீரோ ஹோண்டா SS TN 25 Y 9707 என்ற வண்டியில் கருமந்துறைக்கு சென்றுவிட்டு திரும்பி ஊருக்கு வரும்போது பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை செக்போஸ்டில் சுமார் மாலை 5.00 மணியளவில் பணியில் இருந்த ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீஸ்காரர்கள் பாலாஜி மற்றும் திவாகர் ஆகியோர்கள் மறித்து அவர்கள் சென்ற ஹிரோ ஹோண்டா SS இருசக்கர வாகனத்தை பிடுங்கி கொண்டார்.

அப்போது என் அண்ணன் போலீஸ்காரரிடம் நாங்கள் சொந்த வேலையாக கருமந்துறை சென்று வந்தோம். இனிமேல் இதுபோல் போகமாட்டோம் என்று கூறியுள்ளார். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி டே தேவடியா பயலே ஊரடங்கு நேரத்தில் எங்கடா போயிட்டு வருகிறீர்கள் என்று கூறி ஹீரோ ஹோண்டா இருசக்கர வண்டி பிடுங்கி கொண்டது மட்டுமில்லாமல் எனது அண்ணனை பெரியசாமி காவல் உதவி ஆய்வாளர் தனது கையில் வைத்திருந்த போலீஸ் லத்தியால் ஒரு மனிதன் என்று கூட பாராமல் அடித்துள்ளார்.

எனது அண்ணன் வலி தாங்க முடியாமல் அய்யா அம்மா என்னை கொல்லாதீர்கள். என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். அதை பொருட்படுத்தாமல் டே தேவடியா பையலே நீ சாவுடா என்று மிருகதனமாக அடித்துள்ளார். அப்போது உடனிருந்த சிவன்பாபு, ஜெய்சங்கர் ஆகிய இருவரும் போலீஸ்காரரிடம் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியுள்ளனர்.

அதையும் கேளாமல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எனது அண்ணனின் பின் மண்டையில் ஓங்கி வேகமாக போலீஸ் லத்தியால் ஓங்கி அடித்ததில் அவரது பின் மண்டை உடைந்து பலத்த இரத்த காயம் ஏற்பட்டு பின் மண்டையில் இரத்தம் பீரிட்டு அவர் மயங்கி சுயநினைவின்றி கிடந்தார்.

அப்போது உடனிருந்த ஜெய்சங்கரும், சிவன்பாபுவும் கெஞ்சியும் கேட்காமல் போலீஸ்காரர் மிருகதனமாக தாக்கியதில் சுயநினைவு இழந்துவிட்டார். அப்போது போலீஸ்காரர்களே 108 ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்து வரவழைத்து தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். உடன் ஜெய்சங்கரும், சிவன்பாபுவும் எங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றார்கள்.

தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிபட்ட காயத்திற்கு தையல் போட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அதே 108 ஆம்புலன்ஸ்சில் மேல் சிகிச்சைகாக அனுப்பி வைத்தார்கள். அந்த 108 ஆம்புலன்ஸ்சில் சிவன்பாபுவும், ஜெய்சங்கரும் வந்தார்கள். இடையப்பட்டி பிரிவு சாலையில் நானும் எனது அண்ணன் மனைவியும் ஏறிக்கொண்டோம். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தோம்.

ஆத்தூர் அரசு மருத்துவர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் நரம்பு பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக எங்களிடம் மருத்துவர் தெரிவிக்கவே நாங்கள் தன்னிச்சையாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்கு சேர்த்தோம்.

அங்கு பணியிலிருந்த அரசு மருத்துவர் எனது அண்ணன் போலீஸ்காரர் தாக்கியதால் பலத்தகாயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறியதால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். எனது அண்ணனை கொடூரமாக மிருகத்தனமாக போலீஸ்காரர் அரசு போலீஸ் பணியை துஷ்பிரயோகம் செய்து எனது அண்ணனை கொடூரமாக கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மீது தகுந்த சட்டபடியான நடவடிக்கை எடுத்து அவருக்கு தண்டனை பெற்று தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 ஏத்தாப்பூர்,                                                                      இப்படிக்கு                                              23.06.2021.                                                                   (Sxxxx) துரைசாமி.

மேற்படி எழுத்து மூலமான புகாரின் பேரில் ஏத்தாப்பூர் காவல் நிலைய குற்ற எண் 327/2021 u/s 176(1-A) (a) CrPC r/w 302 IPC ஆக வழக்கு பதிவு செய்து FIR-ன் அசலையும், வாதியின் புகார் அசலையும், கனம் JM-1 ஆத்தூர் அவர்களுக்கும், மற்ற நகல்களைச் சம்மந்தப்பட்ட உயர்அதிகாரிகளுக்கு அனுப்பியும், இவ்வழக்கினை உத்தரவுப்படி விசாரணை மேற்கொள்ள ஆத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.