தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சி முதல் வேர் வரை இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பலன் அளிப்பதால் `கற்பகத்தரு’ என்று பனைமரம் போற்றப்படுவதுடன் தமிழகத்தின் மாநில மரமாகவும் பனைமரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5.10 கோடியாக இருந்த பனைமரங்கள் வீடுகட்டுவதற்கும், விறகுக்காகவும், செங்கல்சூளைக்காவும், தவிர தொழில் நிறுவனங்கள் அமைக்க தரிசு நிலங்களை மேம்படுத்தும் போதும் வெட்டப்படுவதால் தற்போது பனைமரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பனைமரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவு கட்டாயம் என்று கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு, வெளியிட்ட வேளாண்மை பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பூமிநாதன் மீது பனைமரத்தை வெட்டியதற்காக சட்டப்பிரிவு 427ன் கீழ் எடையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2022 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சோலார் பேனல் அமைக்கும் பணிக்காக 24 பனைமரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தை அடுத்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக எடையூர் காவல்நிலையத்தில் பனைமரத்தை வெட்டியதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.