டில்லி:

மோடிக்கு எதிராக கடிதம் எழுதிய மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழ்ப்பட இயக்குனர் மணிரத்தினம், மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா, மேற்கு வங்க நடிகர் கவுசிக் சென் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தனர்.

அதில்,  ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,  முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், இதர சிறுபான்மையினர் மீது கும்பல்களாக தாக்குதல் நடத்தி கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறையை தூண்டும் கோஷமாக மாறிவருவதை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மோடியை வற்புறுத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகர் கவுசிக் சென்னுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கடித்துக்கு பதில் அளிக்கும் வகையில், மோடிக்க ஆதரவாக  ஜெய்ஸ்ரீராம் எனும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லையென பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரானவத், சினிமா தயாரிப்பாளர் விவேக் அக்னிகோத்தாரி, நடனக் கலைஞரும், எம்பி-யும் ஆன சோனால் மான்சிங் உள்ளிட்ட 62 பேர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தனர். அதில்,  பிரிவினைவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளை கொளுத்தும்போது அவர்கள் அமைதியாக இருந்ததாகவும், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகள் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பாக பீகார் மாநிலத்தின் முசாபர்புர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ராம்சந்திர குஹா, மணி ரத்னம் மற்றும் அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு எதிராக வியாழக்கிழமை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முசாபர்புர்  வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனு மீது நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து,  அவர்கள்மீது புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூறிய வழக்கறிஞர், சுதிர் குமார் ஓஜா, இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று  இங்குள்ள சதர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான  ரசீது தொடர்பாக எனது மனுவை ஏற்றுக்கொண்டேன்” என்று  தெரிவித்து உள்ளார்.

இந்த புகாரில், அந்த கடிதத்தில் கையொப்பமிட்ட 49 பேரும்  குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று பதியப்பட்டு உள்ளது. அவர்கள் மீது,  “நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதாகவும், பிரதமரின் அற்புதமான செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும்” “பிரிவினைவாத போக்குகளுக்கு ஆதரவளிப்பதை” தவிர. தேசத் துரோகம், பொதுத் தொல்லை, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.