சென்னை:

கைவிரல் ரேகை பிரிவு துணைஆய்வாளர்  தேர்வு முறைகேடு வழக்கில் விசாரணையை தொடர்ந்து, முறை கேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்ஆணையருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறைக்கு தேவையான காவலர்கள் மற்றும் அதிகாரி களை தேர்வு செய்கிறது.  இந்த அமைப்பின்  தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான கைரேகை நிபுணர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வும் நடைபெற்றது.

இதில் முறைகேடு நடைபெற்றதாக காவலர் மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து,  கைவிரல் ரேகை பிரிவு எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், இடைத்தரகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணித்து 22ம் தேதி அறிக்கை அளிக்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்த புகாரின்பேரில்  தேர்வாணைய அதிகாரிகளை விசாரிக்கவும் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்ந்த காவலர் மூர்த்தியை கைது செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். விசாரணைக்கு தேவைப்படும் போது மூர்த்தி ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.