சென்னை:

8985970149, 94459 53544 இந்த எண்ணுக்கு போன் செய்து, உங்களை உங்களை சோதனையிடுபவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்தானா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி வருமான வரித்துறை அலுவலகம் கூறி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒரு புறமும், வருமான வரித்துறையினர் மற்றொருபுறமும் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதற்கிடையில், சோதனையிடும் தேர்தல் அலுவலர்கள், காவலர்கள், சோதனையிடுபவர்களின்  பொருட்களை அபகரித்துவிடுவதாகவும், பல இடங்களில் பணத்தை பறிமுதல் செய்துவிட்டு அனுப்பி விடுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதுபோல வருமான வரித்துறையினர் என்ற பெயரில் சிலர் மோசடியாக சோதனையில் ஈடுபட்டு பணம், பொருட்களை அபகரித்துவிடும் புகார்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், வருமான வரித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில்,  வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு சோதனை செய்ய வருபவர்கள், வருமான வரித்துறையை சேர்ந்தவர்கள் தானா என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும்,  வருமான வரித்துறை வழங்கும் அடையாள அட்டையில், அதனை வழங்கும் அதிகாரியின் கையெழுத் தும், பதவியும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும்,  வருமான வரித்துறை அதிகாரிகள்தானா என சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களாக இந்த 8985970149, 9445953544  இரண்டு மொபைல் எண்ணைகளையும் வழங்கி உள்ளது.

பொதுமக்களே உஷார்… உங்களை சோதனையிடுவது யார் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்…