சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே ஆளில்லாதா மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு நடைபெற உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான சென்னை மெட்ரோவின் 4-வது வழித்தடம் (மஞ்சள் பாதை/முன்னர் ஆரஞ்சு), 26.1 கி.மீ தொலைவில் 27-28 நிலையங்களுடன், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடபழனி – போரூர் – பூந்தமல்லி இடையேயான முதல் கட்டப் பணிகள முடிவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டங்கள் உள்பட பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த ஆண்டு(2026) ஜனவரி அல்லது பிப்ரவரியில் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் இயக்க இறுதி ஆய்வை நாளை மேற்கொள்ளப்படுகிறது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயிலை இயக்க நாளை முதல் 3 நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவரி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வின்போது, பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அத்துடன் பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை 80-90 கி.மீ. வேகத்தில் ஆஇயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது ஏற்கனவே இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை தொடங்கும் இறுதி ஆய்வு பணிகள் முடிவுற்ற ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.