சென்னை: கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. இந் நிலையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் கூறி இருப்பதாவது:
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள மாணவர்களின் நலனுக்காக ஆன்லைன் தேர்வு நடத்த அனுமதிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
ஆன்லைனா? அல்லது ஆப்லைனா? எந்த தேர்வு வைக்கலாம்? என கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் முடிவு செய்து கொள்ளலாம். தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தேர்வுகள் நடத்த முடியாது.
தேர்வு மையங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கூட தேர்வு மையங்கள் அமைக்கலாம். விரைவில் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.