ஆக்ரா: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பளிங்கு சுவர்களின்மேல், மீண்டும் பச்சை மற்றும் கருப்பு கறைகள் தென்படத் துவங்கியுள்ளன.

யமுனை நதியின் மாசுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த வசந்த் ஸ்வரன்கர் கூறுவதாவது; நதியின் சீர்கேட்டினால் உண்டாகும் பூச்சிகள்தான் இந்தக் கறைகளுக்கு காரணம். இந்த சிக்கல் நிரந்தரமான ஒன்றாக மாறியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பூச்சியினத்தின் கழிவுகள் படிவதாலேயே இந்த கறைகள் ஏற்படுகின்றன. இதனால், தாஜ்மஹாலின் சுவர்களில் இடம்பெற்ற நுட்பமான டிசைன்கள் மற்றும் பூக்களின் வடிவங்கள் போன்றவை சேதமடைகின்றன.

முன்பெல்லாம் இத்தகைய பூச்சி தாக்குதல் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டுமே நிகழும். ஆனால், தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதை சுத்தம் செய்வதற்கு காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே பயன்படுத்துகிறோம். ஆனால், தொடர்ச்சியாக இப்படி செய்துகொண்டே இருந்தால், பளிங்கு கற்களின் பிரகாசமே போய்விடும். எனவே, யமுனை நதியை முறையாக சுத்தப்படுத்துவதே இதற்கான ஒரே நிரந்தர தீர்வு” என்றுள்ளார்.