திரைவிமர்சனம்: சவரக்கத்தி

Must read

டு – புலி ஓட்டம்தான் கதை.

சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கும் ரவுடி மங்கா (இயக்குநர் மிஷ்கின்).  பரோல் முடிந்து மீண்டும் சிறை செல்ல வேண்டிய நாளில், தனது கும்பலுடன் வெளியே காரில் செல்கிறார்.

அதே ஊரில்  சிகை திருத்தும் நிலையம வைத்திருப்பவர்  பிச்சை மூர்த்தி (இயக்குநர் ராம்).

காதல் திருமணம் செய்துகொள்ள கோவிலில் காத்திருக்கும் தனது மச்சானுக்கு திருமணம்  செய்து வைப்பதற்காக, தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் இருசக்கரவாகனத்தில் செல்கிறார்.

சிக்னலில் மிஷ்கின் கார் திடீரெனக பிரேக் போட.. அருகில் சென்றுகொண்டிருந்த  ராம் தனது பைக்கில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார். இதைப் பார்த்து  அவரது பிள்ளைகளும் மனைவியும் சிரிக்க, அவர்கள் முன்பு தன்னை வீரனாக  காட்டிக்கொள்ள நினைக்கும் ராம், காருக்குள் இருக்கும் மிஷ்கின் மற்றும் அவரது ஆட்களை கண்டபடி பேசுகிறார்கள். அதோடு மிஷ்கினை அடிக்க கையையும் ஓங்குகிறார்.

இதற்கிடையே மிஷ்கின் காரை வேறு ஒரு கார் மோத, அதனால்  மிஷ்கினுக்கு அடிப்பட்டு வாயில் ரத்தம் வருகிறது.  ஆனால்,  அடித்ததால் தான் ரத்தம் வருகிறது, என்று ஆத்திரப்படும் மிஷ்கின், ராமை தேடிப்பிடித்து கொல்ல துரத்துகிறார்.

அன்று மாலை பரோல் முடிந்து மிஷ்கின் சிறைக்குச் செல்ல வேண்டும். அதற்குள் ராமை கொன்றுவிட வேண்டுமென்று அவர் துரத்த.. ராம் பதறியடித்து தப்பி ஓட…

என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

கதை, திரைக்கதை எழுதியிருப்பதோடு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் மிஷ்கின்.

ரவுடி மங்காவாக வரும் மிஷ்கின் மிரட்டியிருக்கிறார். அவரது பெரும் கண்களே பயப்பட வைக்கிறது. படம் முழுதும் டென்சன் பேர்வழியாக வந்து ரசிக்க வைக்கிறார்.

அதே போல பிச்சைமூர்த்தியாக வரும் ராம் கதாபாத்திரமும் சிறப்பு. முகம் முழுதும் தாடி, அழுக்கு பேண்ட் சர்ட் என்று கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். எதற்கெடுத்தாலும் பொய் பேசுவது, குடும்பத்தினர் முன்பு தன்னை “வீரனாக” காண்பித்துக்கொள்ள ரவுடி மங்காவிடம் எகிறுவது, பிறகு பயந்து பயந்து பதுங்குவது என்று அசத்தியிருக்கிறார் ராம்.

காதுகேளாத வரும் அவரது மனைவி பூர்ணாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கிராமத்து பெண்மணியை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். நிறைமாத கர்ப்பிணியான அவர் படம் முழுதும் ஓடிக்கொண்டே இருக்க.. நமக்கு பதைபதைக்கிறது.

மிஷ்கின் அடியாள் படையில் இருப்பவர்கள், ராம் கடையில் வேலை பார்ப்பவர்கள் என்று சிறு சிறு கதாபாத்திரங்கள்கூட கவனத்தை ஈர்க்கின்றன.

மிஷ்கின் திரைக்கதை எப்போதுமே கண்ணைக்கட்டிய குதிரையாக பாயாது. கதையைச் சுற்றி பல கதைகளையும் மனிதர்களையும் ரத்தமும் சதையுமாய் கண் முன் நிறுத்துவது அவரது பாணி. இந்தப்படத்திலும் அதுதான்.

மிஷ்கின் – ராம் ஆடுபுலி ஆட்டம் மட்டுமின்றி.. பூர்ணாவின் செண்டிமெண்ட் பாதை, காதல் ஜோடியின் நெகிழவைக்கும் பாதை.. எல்லா பாதைகளும் சரியாக ஓரிடத்தில் ஒன்று சேரும் சிறப்பான திரைக்கதை.. வழக்கம்போல பாராட்டைப் பெறுகிறார் மிஷ்கின்.

ஆனால் காட்சிகள் பல பழசு.

ஒரு புறம் ராமை துரத்துகிறது மிஷ்கின் கோஷ்டி. இன்னொரு புறம் மச்சானின் திருமணத்தைத் தடுக்க இவரைத் துரத்துகிறது இன்னொரு கோஷ்டி.

இரு கோஷ்டிகளையும் மோத வைத்து தப்பிக்கிறார் ராம். இதுபோல ஆயிரம் படங்களில் வந்துவிட்டது.

இன்னொரு காட்சி…

தனது மனைவியை கடத்திய வில்லன்களை எதிர்க்கும் ராம் அவர்களிடம் கடுமையாக அடிபடுகிறார். அப்போது அவரது மகன் அவரைப் பார்க்க.. வீரம் வந்து எதிரிகளை துவம்சம் செய்கிறார்.

இதுவும் பல படங்களில் வந்த காட்சிதான். இப்படி சிலகாட்சிகள் அலுப்பூட்டுகின்றன.

இசயமைப்பாளர் அரோல் கொரெலியின் ஒரே ஒரு பாடலும், படம் முடிந்தபிறகு ஒலிக்கும் பாடலும் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். ஓடிக்கொண்டே இருக்கும் ராமையும், துரத்திக்கொண்டே இருக்கும் மிஷ்கினையும் அவர் படம் பிடித்திருக்கும் அழகு சிறப்பு.

படத்தை இயக்கியிருப்பது மிஷ்கின் தம்பி  ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். அதனால்தானோ என்னவோ மிஷ்கின் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.

அதனால் என்ன.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார்.

ஒரு உயிரை கொல்ல ரவுடி எடுக்கும் கத்தி, படத்தின் இறுதியில் ஒரு உயிர் பிறக்க தேவைப்படுகிறது என்ற அவரது பாசிடிவ் அப்ரோச்சுக்கு கைதட்டல்கள்.

அதே நேரம் மிஷ்கின் பாணியை தவிர்த்து தனிப்பாதையில் பயணத்தைத் தொடர வாழ்த்துகள்.

More articles

Latest article