சென்னை:

சென்னையில் திரைத்துறையினருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, வீரமணி ஆகியோர்  நடத்தி வந்த பேச்சு வார்த்தை இழுபறியாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பேச்சுவார்த்தை 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் கடந்த மார்ச் மாதம் முதல் பிரச்சினைகள் நிலவி வருகிறது. இதன் காரணமாக புதிய படம் வெளியிடுவதிலும், படப்பிடிப்பு நடைபெறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த பிரச்சினைகள்  குறித்து கியூப்  டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு மாதமாக வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  தமிழக அரசு திரையுலகினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்தும் பேசினார்.

அதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவவார்த்தை தொடங்கியது. இந்த ஆலோசனையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விஷால், எஸ்.ஆர்.பிரபு, கதிரேசன் ஆகியோரும்; திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரமணியம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, . தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு திரையரங்க உரிமையாளர்கள் உடன்பட மறுப்பதால் இழுபறி நிலவியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ள அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர் ஆனால் முடிவு ஏதும் எடுக்கப்படாத நிலையில்,  பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.