சென்னை: கனிமவளக் கொள்ளை கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் சொத்துக்களான கனிம வளங்களை உரிமம் இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அலுவலர்கள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதையடுத்து, அரசின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை அரசு, கடுமையாக கையாள வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விஷயம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.