சென்னை

ழையினால் உண்டாகும் சேதங்களை விரைவில் சீரமைக்க கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மிக கனமழை பெய்ததால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலமாக ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி,

”தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  1,32,000 மின்கம்பங்கள், 16,500 கி.மீ. மின்கம்பிகள், 7,000 மின்மாற்றிகள் மற்றும் 1,071 மின்மாற்றி கட்டமைப்புகள், வி.கிராஸ் ஆரம் 1,00,000, எர்த் பைப் 6,000, குறைந்த அழுத்த கிராஸ் ஆரம் 75,000, உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த இன்சுலேட்டர் 8,00,000, இழுவை கம்பி 48,000, பில்லர் பெட்டிகள் 1,270, உயரழுத்த புதைவடம் 65 கி.மீ., தாழ்வழுத்த புதைவடம் 1,000 கி.மீட்டர்கள்  கையிருப்பில் உள்ளன.  

மாநிலம் முழுவதும் சுமார் 4,000 பொறியாளர்கள் மற்றும் 36,000 மின் ஊழியர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.  அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் செயற்பொறியாளர் தலைமையில் 24 நேரமும் மழைக்காலத்தில் காண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கவனித்து வருகின்றனர்.

சிறப்புக் குழுக்கள் துணை மின் நிலையங்களுக்கு வரும் மின்பாதையில் ஏற்படும் மின்தடையை சரிசெய்யவும், மின்பாதையை ஆய்வு செய்வதற்கும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆகவே பொதுமக்களுக்கு மின்தடை ஏற்படா நிலை உள்ளது.  இதற்காக ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு 24 நேரமும் பணியில் ஈடுபட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு மழைக் காலத்தில் காண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கவனித்து வருகின்றனர்.  அதிகமான மழை பெய்யும் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 12,100 பணியாளர்கள் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

(சென்னை மற்றும் புறநகர் – 4,000, திருவள்ளுர், காஞ்சிபுரம் – 1,350, கடலூர் – 1,800, நாகப்பட்டினம், மயிலாடுதுறை – 926, தஞ்சாவூர் – 1,568, திருவாரூர் – 435, செங்கல்பட்டு – 2,043). பருவமழைக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் பெருமளவு பாதிக்கப்படாவண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  உள்ள 1,757 பீடர்களில் 71 பீடர்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 44.20 லட்சம் மின் நுகர்வோர்களில் 61,700 (1.3 சதவீதம்) மின் நுகர்வோர்களுக்கு தற்சமயம் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு விரைந்து மின்சாரம் வழங்கவும், மின்கட்டமைப்பில் ஏற்படும் சேதங்களை விரைந்து சரிசெய்யவும் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் எவ்வித தடங்கலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.”

எனத் தெரிவித்துள்ளார்.