சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு உதவ ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை தவெக களமிறக்குகிறது. இதற்கான அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்த முறை 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், திமுககை கடுமையாக விமர்சித்து வரும், தவெக அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடவும் முடிவு செய்துள்ளது.  அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார். இதற்கு ஆளும் திமுக அரசு, தனது காவல்துறையை கொண்டு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தாலும், முறையான அனுமதி பெற்று கட்சியின் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 6 தேர்தல் குழுக்களை அமைக்க தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் இடம் பெற வேண்டும் எனவும்,   ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் நபர்கள் அந்தந்த தொகுதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், ஒரு குழுவில் இடம் பெற்றவர் மற்றொரு குழுவில் இடம் பெறக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட உள்ள   வேட்பாளர்களுக்கு உதவும் விதமாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தன்னார்வலர் களாக நியமிக்க நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்

இதுகுறித்து விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் சந்திக்க உள்ளது. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை, நிர்வாகிகள் தன்னார்வலராக நியமிக்க வேண்டும்.

ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான வேலைகளில் மாவட்ட நிர்வாகிகள் உடனே ஈடுபட வேண்டும்” என விஜய் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]