சென்னை,

ன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் அதிமுக துணைப்பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக சசி அணி வேட்பாளருமான டிடிவி தினகரன் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார்.

‘பரணி பீச் ரிசார்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது.  இந்த கடன்தொகையில் ரூ.2.5 கோடி கோடநாடு எஸ்டேட் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வங்கியில் கடன்பெற்ற இந்த ரூ.3 கோடி ரூபாயும் வெளி நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் மூலம் திருப்பி செலுத்தப் பட்டது.  இதில்,  அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்தது.

இதை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டி.டி.வி.தினகரன் மீதான இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

20 ஆண்டுகளை கடந்தும்  நடைபெற்று வருகிற இந்த வழக்குகள்,  மீண்டும் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும், இன்று (22ந்தேதி) நடைபெறும் விசாரணைக்கு தினகரன் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவின் காரணமாக  இன்று நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராகிறார். இதன் காரணமாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.