சென்னை:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு காவல் உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு – 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், கடந்த ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்புக்காக சென்றிருந்தார். அப்போது டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.ஐ தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் 197 சட்டப்பிரிவின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அதன்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்குமாறு அனுமதியளித்த பிறகுதான், சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அந்த வழிமுறைகளின் படி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் புகார் அளிக்க விடாமல் அப்போது பணியில் இருந்த மத்திய மண்டல ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி ஆகிய மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக அரசுக்கு சிபிசிஐடி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில்,வழக்கை நடத்துவதற்கு அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்களாக வைத்தியநாதன், கலா ஆகியோரை நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கு நாளை மறுதினம் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.