டெல்லி: மத்தியஅரசு பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களது ஓய்வுக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற இதுவரை கணவன் பெயரை பரிந்துரைக்க முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், இனிமேல், அவர்கள் தங்களது குழந்தைகளையும்  பரிந்துரைக்கலாம் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், பிற குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே தகுதி பெறுவார்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள்  அவரது  சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள்.  பெண் ஊழியர் இறக்கும் போது கணவர் மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடைவர். மேலும், அவருக்கு  மற்றொரு மனைவி இருந்தால், அது மறுமணத்திற்கு சமம் மற்றும் கணவருக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை.

ஆனால், மைனர் குழந்தை உயிருடன் இருந்தால், அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு குழந்தையின் பாதுகாவலர் என்ற முறையில் குடும்ப ஓய்வூதியத்தை தந்தை மூலம் செலுத்தலாம். 

திருமணமாகாத அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில் ஊழியரின் தந்தை அல்லது தாயார் அல்லது திருமணமாகாத 25 வயதுக்குட்பட்ட சகோதரர் அல்லது சகோதரி ஆகியவர்களில் ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த நிலையில்,  பெண் ஊழியர்கள்  குடும்ப ஓய்வூதியம் பெற தங்கள் கணவருக்குப் பதிலாக தங்கள் மகன்கள் அல்லது மகள்களை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்க அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்கான உறுதிப்பாட்டுடன் இந்தத் திருத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

குடும்ப ஓய்வூதிய ஒதுக்கீடுக்கான புதிய விதி:

மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021-க்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தத்தின் கீழ், பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுவோர், அவர்கள் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியாக தங்கள் குழந்தைகளை இப்போது நியமிக்கலாம். வாழ்க்கைத் துணை முதன்மை பெறுநராக இருந்த முந்தைய விதியை இது மாற்றுகிறது. மேலும் பிற குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே தகுதி பெறுவார்கள்.

திருமண முரண்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்:

திருமண முரண்பாடுகள், விவாகரத்து நடவடிக்கைகள் அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணைத் தடைச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் ஏற்படும் சூழ்நிலைகளைத் தீர்ப்பதற்காக இந்தத் திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிக்கலான குடும்ப சூழ்நிலைகளிலும் கூட குடும்ப ஓய்வூதிய ஒதுக்கீடு நியாயமானதாக இருப்பதை இது உறுதி செய்கிறது.

பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுவோருக்கான நடைமுறைகள்:

Department of Pensions and Pensioners’ Welfare (DoPPW)-படி, ஒரு பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர் தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அலுவலகத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நடந்துகொண்டிருக் கும் நடவடிக்கைகளின் போது பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் இறந்து விட்டால், அதன்படி குடும்ப ஓய்வூதியம் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.