திருச்சி

திருச்சியில் மருந்துக் கடை உரிமையாளரிடம் ரூ.82.5 லட்சம் மோசடி செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருச்சியில் உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த முஸ்தபா அரியமங்கலத்தில் மருந்து  கடை நடத்தி வருவதுடன், அரியமங்கலம் பகுதி வர்த்தகர்கள் நலச்சங்கத் தலைவராகவும் உள்ளார். முஸ்தபா கடந்த 2016-ம் ஆண்டு ரூ.30 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என்று ஏலச்சீட்டு குழுக்களை நடத்தி வந்தார்.

பொன்மலை ரயில்வே காலனியில் வசித்து வரும் ரயில்வே ஊழியரும், முஸ்தபாவின் நண்பருமான சேகர், தனது மகன் அருணையும் ஏலச்சீட்டு குழுக்களில் சேர்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு நவம்பா் மாதம் வரை மொத்தம் 28 குழுக்களில் ரூ.3 கோடி மதிப்பிலான சீட்டில் அருண் சேர்ந்து பணம் எடுத்துள்ளார்.

அருண் ஆரம்பத்தில் மாதம் தோறும் சீட்டுப் பணம் செலுத்தி பிறகு பணம் செலுத்தவில்லை. அருண் அனைத்து குழுக்களிலும் சேர்த்து அருண் மொத்தம் ரூ.82 லட்சத்து 43 ஆயிரத்து 370 பாக்கி வைத்ததால் முஸ்தபாவால் அந்த குழுக்களில் உள்ள மற்றவர்களுக்குச் சீட்டுப் பணம் கொடுக்க முடியவில்லை.

அவர் சேகர் மற்றும் அருணிடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.  எனவே முஸ்தபா திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் அருண், அவருடைய தந்தை சேகர் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.