சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ போராட்டத்தை ஒத்தி வைத்துள்ள நிலையில்,  மற்றொரு அமைப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  கூட்டமைப்பு  சார்பில்,  திமுக அரசுக்கு எதிராக மார்ச்  3-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என அறிவித்து உள்ளது.

10 அம்சக் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கொடுத்தும், அதன் மீது கடந்த சட்டமன்ற தொடரில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.  இது முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது. இதை கண்டித்து,  சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக  தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் அறிவித்து உள்ளார்.

முன்னதாக இந்த கூட்டமைப்பினரின் ஆலோசனை கூட்டம் மாநில நிதிகாப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில், மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த. அமிர்த குமார், தலைமைச் செயலக பணியாளர் சங்க மேனாள் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் அகில இந்திய தலைவர் கே. கணேசன், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வே.மணிவாசகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவி சு. தமிழ்ச்செல்வி, தமிழ் மாநில அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மு. செ. கணேசன், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணி தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெ.சரவணன், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க மாநிலத் தலைவர் எஸ் மதுரம், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜெய.துரை, தமிழ்நாடு உயர் கல்வி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் டாக்டர்.இரா. மணிகண்டன், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சு.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  மார்ச் 3-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய பாஸ்கரன்,  திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த  லட்சக்கணக் கான   பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது.  எனவே அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுடைய பல லட்சம் வாக்குரிமை உள்ள குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அடுத்த மாதம் 3ந்தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

ழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் ‘ஜாக்டோ ஜியோ’ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த சூழலில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் 13.02.2024 அன்று  ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும். கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும், 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்திருந்தனர்.

இதையடுத் கடந்த 14-02-2024 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை  ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன், வெங்கடேசன், நேரு, தியோடர் ராபின்சன், தாஸ், பொன்னிவளவன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, “கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்வரே அழைத்து பேசியதால் எங்கள் நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை. எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்ததன் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த ஜாக்டோ – ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம் ” எனத் தெரிவித்தனர்.

ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகளின் இந்த போராட்டம் வாபஸ் அறிவிப்பு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மாநில நிர்வாகிகள் மற்றவர்களுடன் கலந்து பேசி  முடிவு செய்யாமல், தன்னிச்சையாக போராட்டத்தை  வாபஸ் பெறுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாட்ஸ்அப் உள்பட சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது மற்றொரு கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.