மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியை கடந்த ஓராண்டுக்கும் மேலாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராடும் விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து விளக்கிக் கூற முடியாத காரணத்தால் இந்த புதிய சட்டங்கள் நாடாளுமன்றம் மூலம் முறையாக விலக்கிக் கொள்ளப்படும் என்ற அதிரடி அறிவிப்பை ஓராண்டு கழித்து பிரதமர் மோடி அறிவித்தார்.

பாஜக அரசின் இந்த அந்தர்பல்டி அறிவிப்புக்கு பதிலடி கொடுத்துள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தின் மறுமசோதா மூலம் இந்த சட்டங்கள் முறையாக விலக்கிக் கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் எங்களது ஆறு முக்கிய கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கை விவரம் :

1. குறைந்தபட்ச ஆதார விலை (MSP) அனைத்து விவசாய விளைபொருட்களின் விலையை விட கூடுதலாக, முழு சாகுபடி செலவின் அடிப்படையில் (C2+50 %) சட்டபூர்வ உரிமையாக மாற்றம் செய்ய வேண்டும்.

2. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரேற்றி கொன்ற வழக்கில் மூளையாக செயல்பட்டதாக 120-பி பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தேனி சுதந்திரமாக உலாவருவதோடு சக அமைச்சர்களுடன் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

3. வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த இயக்கத்தில் 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் நினைவாக தியாகிகள் நினைவிடம் கட்ட நிலம் வழங்க வேண்டும்.

4. போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

5. “மின்சாரச் சட்டத் திருத்த மசோதா” வை திரும்பப் பெற வேண்டும் (பேச்சுவார்த்தையின் போது, ​​அது திரும்பப் பெறப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்தது, ஆனால் அதை மீறி நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது)

6. தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் சட்டம், 2021 இல் உள்ள விவசாயிகளுக்கு எதிரான காற்று தர மேலாண்மை ஆணைய தண்டனை விதிகள் நீக்கப்பட வேண்டும்.

பிரதமர் அவர்களே, நாங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். சாலையில் அமர்ந்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். நாங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டுமானால், உடனடியாக விவசாயிகளுடன் ஆறு பிரச்னைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துங்கள். அதுவரை இந்த போராட்ட இயக்கம் தொடரும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.