டில்லி
உச்சநீதிமன்றம் அமைக்க உள்ள குழுவை ஏற்க வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மறுத்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தலைநகர் டில்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி 40 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நடத்திய அனைத்து கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
விவசாயிகளின் போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு அளித்து வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழு அமைக்க முன் வந்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைப்படி வேளாண் சட்டங்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த குழுவை ஏற்க வேளான் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மறுத்துள்ளனர்.
போராட்டம் நடத்தி வரும் விவசாயச் சங்கமான கிரந்திகாரி கிசான் யூனியன் தலைவரான தர்ஷன் பால், “நாங்கள் உச்சநீதிமன்றம் அமைக்கும் மத்தியஸ்த குழுவை ஏற்கப்போவதில்லை. இதை நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். உச்சநீதிமன்றம் அமைக்கும் இந்த குழுவின் தோள்களில் மத்திய அரசு தனது சுமையை மாற்றி விட்டுத் தப்பிக்கும் என்பதை நாங்கள் அறிவோம். மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ளார்.