விவசாயிகள் போராட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார் ?

Must read

 

27 செப்டம்பர் 2020 அன்று குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 48 வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கை என்ன என்பது குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

குழுவின் பரிந்துரை வரும் வரை வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி – புபீந்தர்சிங் மான் – அசோக் குலாதி – அனில் தன்வாட்

இக்குழுவில், 1) பாரதிய விவசாயிகள் சங்க தலைவர் புபீந்தர்சிங் மான் 2) இண்டர்நேஷனல் பாலிசி அமைப்பின் தலைவர் டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி 3) விவசாய பொருளாதார வல்லுநர் அசோக் குலாதி 4) மகாராஷ்டிரா சிவ்கேரி சங்கத்னாவின் அனில் தன்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் இடம் பெற்றிருக்கும் 4 பேரும் கடந்த சில மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பாரதிய விவசாயிகள் சங்க தலைவர் புபீந்தர்சிங் மான் தலைமையில் கடந்த டிசம்பர் 14 ம் தேதி மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து மனு அளித்தனர், விவசாய சட்டங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கோரியிருந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு அடிபணிந்து, வேளாண் சட்டங்களில் சிறு திருத்தம் செய்தாலும் கூட அது இந்திய விவசாயத்தை பாதிப்பதோடு, உலக அளவில் குவிந்து வரும் வாய்ப்புகள் கைநழுவிப்போகும் என்று இண்டர்நேஷனல் பாலிசி அமைப்பின் தலைவர் டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதி இருக்கிறார்.

அரசு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக விவசாய பொருளாதார வல்லுநர் அசோக் குலாதி கூறிவருகிறார்.

மகாராஷ்டிரா சிவ்கேரி சங்கத்னாவின் அனில் தன்வாட், “வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோருவது தேவையற்றது, மாறாக சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்” என்று ஏற்கனவே கருத்து தெரிவித்ததோடு, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா சிவ்கேரி சங்கத்னா சார்பில் பேரணியும் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விவசாய சங்கங்களுடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டம் துவங்கிய நாளில் இருந்து கூறிவரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை சொந்த ஊர் திரும்ப போவதில்லை என்றும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான நிலையில் இருக்க கூடிய நான்கு பேரை கொண்ட ஒரு குழுவை விவசாயிகளுடன் பேச்சு நடத்த தேர்ந்தெடுத்திருப்பது, அரசும் உச்சநீதிமன்றமும் எதிர்பார்க்கும் சுமூக உடன்பாடு ஏற்பட வழி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இன்னும் 10 நாட்களில் இந்த குழு தனது முதல் கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார், இதனை தொடர்ந்து ஜனவரி 26 ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

வேளாண் சட்டத்திற்கு ஆதரவளிப்போர், எதிர்ப்போர் உள்ளிட்ட அனைத்து தரப்பு விவசாயிகளும் இந்த குழு முன் ஆஜராகி தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன் வைக்க வாய்ப்பளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article