பத்து ரூபாய்க்கு டீயும் தின்பண்டமும் விற்பனை : கேரளாவில் நூதன போராட்டம்

Must read

கோழிக்கோடு

கோழிக்கோடு மாவட்டம் கூடரான்கி பகுதியில் விவசாயிகள் மலிவுவிலை தேநீர்க்கடை துவங்கி நூதன போராட்டம் நடத்தியுள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மலையோரப் பகுதியில் அமைந்துள்ளது கூடரான்கி.  இங்கு விவசாயிகள் அதிகம் உள்ளனர்.   இவர்களின் ஒரே பொழுது போக்கு தேநீர் அருந்துவது மட்டுமே.   கூடரான்கி மக்களுக்கு தேநீருடன் ஏதாவது தின்பண்டங்கள் கொரிப்பது பழக்கமான ஒன்று.    அவர்கள் அதே பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் தேநீர் அருந்தி வந்துள்ளனர்.

அந்த உணவு விடுதிகளில் ஒரு கோப்பை தேநீர் ரூ. 8 எனவும், பருப்புவடை, உளுந்துவடை, நெய்யப்பம் போன்றவைகள் ரூ.  8 எனவும் விற்கப்பட்டு வந்துள்ளன.   இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் உணவு விடுதிகள் முன் அறிவிப்பின்றி திடீரென விலையை உயர்த்தி உள்ளன.   தற்போது ஒரு கோப்பை தேநீரின் விலை ரூ. 9 எனவும் தின்பண்டங்களில் விலை ரூ. 12 எனவும் உயர்த்தப் பட்டுள்ளது.   இதை எதிர்த்த விவசாயிகளிடம் உணவு விடுதி உரிமையாளர்கள் “நாங்கள் வைக்கும் விலைக்கு சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம்.   இல்லையெனில் சாப்பிட வேண்டாம்.  நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை” எனக் கூறி உள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த அந்த விவசாயிகல் ஒன்று கூடி மாலை 4 முதல் இரவு 7 வரை தேநீர்க்கடை அமைத்துள்ளனர்.    இந்தக் கடையில் ஒரு கோப்பை தேநீர் விலை ரூ.10 எனவும் ஒரு கோப்பை தேநீருக்கு ஒரு தின்பண்டம் இலவசம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அங்குள்ள விவசாயிகளும் தொழிலாளர்களும் பெருத்த ஆதரவு அளித்துள்ளனர்.

முதலில்  100 வாடிக்கையாளர்களாக இருந்த இந்தக் கடைக்கு தற்போது 450 பேர் வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.   பலரும் தின்பண்டங்களை வீட்டுக்கு வாங்கிச் செல்ல விரும்புவதால் மூன்று தின்பண்டங்களை தற்போது ரூ. 10 என விற்பனை செய்து வருகின்றனர்.   இதை லாப நோக்கின்றி நடத்துவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

தற்போது அங்குள்ள உணவு விடுதி உரிமையாளர்கள் இந்த விவசாயிகளுடன் விலை குறைப்புப் பற்றி பேச்சு வார்த்தை நடத்த அழைத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.   இது குறித்து அங்குள்ள விவசாயிகளில் ஒருவர், “கோஷம் போடாமல், கூட்டம் சேராமல் நடந்த இந்தப் போராட்டத்துக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article