மும்பை: மராட்டியத்தின் சாகர் நாகா பகுதியிலிருந்து பார் நாகா பகுதி வரையிலான 1.5 கி.மீ. நீளமுள்ள பகுதி முழுவதும் சிவப்பு ஆறாக காட்சியளித்தது.

மராட்டிய மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களின் 60 கிராமங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிவப்பு தொப்பி மற்றும் பெண்கள் சிவப்பு சேலை அணிந்து, மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் மற்றும் பரோடா – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை ஆகிய திட்டங்களை எதிர்த்து தங்களின் வேளாண் நிலங்களைப் பாதுகாக்க வேண்டி போராட்டத்தில் குதித்தனர்.

இந்த திட்டங்களினால் ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், இந்த திட்டங்களுக்காக விவசாயிகள் வலுக்கட்டாயமாக தங்களின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

அகில இந்திய கிஸான் சபா தலைவர் அஷோக் தவாலே, “அரசின் இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடையாது. இது தனியார் மயமாக்கும் ஒரு முயற்சிதான்.

இந்த நாட்டின் குடிமக்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காகத்தான் வாழ வேண்டுமென்றால், இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக தலைவர்கள் பாடுபட்டதில் அர்த்தமே இருக்காது” என்றார்.