டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய பாதுகாப்பு மசோதாவுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. அவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகளும் இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் விவசாயிகள் டிராக்டரை எரித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளும் இந்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
வடமாநிலங்களில் கடந்த ஒருவாரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இன்று நாடு முழுவதும் பாரத் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டு உள்ளது. பஞ்சாப், டெல்லி பகுதிகளில் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது.
‘தமிழகத்திலும், திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை வடக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘கர்நாடகாவிலும் விவசாய மசோதாவுகு போராட்டம் வலுத்துள்ளது. அங்கு எதிர்கட்சிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் பேருந்து சேவை முடங்கியது. பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடப்பதால போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் கடுமையாகி உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.