சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிடக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதன் எதிரொலியாக, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த ஆண்டு திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் வெறும் பச்சரியும், சர்க்கரையும் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது பொதுமக்களிடையே குறிப்பாக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என ஆங்காங்கே விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பொங்கல் பண்டிகைக்கு கருப்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் கூறியதுடன், தங்களது இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் கூறினர். மேலும் இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. அத்துடன் எதிர்க்கட்சியான அதிமுகவும் போராட்டம் அறிவித்தது.
இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில நடைபெறறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.