சென்னை,

மிழ்நாட்டில் விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து உடனே ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாகவும், அண்டை மாநிலமான கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதாலும் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர்கள் காய்ந்து வருவதை காணும் விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் மரணத்தை நாடி வருகின்றனர்.

இது சம்பந்தமாக விவசாயிகள் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று காலை முதல்வரை சந்தித்து விரிவாக பேசினார்.

இந்நிலையில், விவசாயிகள் தொடர் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டு உள்ளார். கலெக்டர்களின் அறிக்கை கிடைத்ததும், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப் பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.3 மி.மீ. மழையே கிடைக்கப் பெற்றுள்ளது.

மாநிலத்தில்  உள்ள 32 மாவட்டங்களில், 21 மாவட்டங்களில் மழை குறைவு  60 சதவீதத்துக்கும் அதிகமாகும். அதாவது, இந்த மாவட்டங்களில் 40 சதவீதம் வரையே வடகிழக்கு பருவத்தில் மழை கிடைக்கப் பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 11 மாவட்டங்களில் மழை குறைவு 35 முதல் 59 சதவீதமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகி உள்ளது.

மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் 10 சதவீத அளவு கிராமங்களில் பயிர் நிலை  நேரடி ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்க இயலும்.

எனவே, சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதனை மேற்பார்வையிட்டு அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்க ஏதுவாக அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உடனடியாக அமைக்கப்படும்.

இந்தக் குழுக்கள் 9.1.2017 வரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 10.1.2017 அன்று தங்களது அறிக்கையினை அரசுக்கு அளிக்கும்.  இந்த அறிக்கைகளின் அடிப்படையில், வறட்சி பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு  தேவையான நிவாரணங்கள் அனைத்தையும் அரசு வழங்கும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

பயிர் நிலைமைகள் குறித்து உயர்மட்டக்குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் என்ற உத்தரவாதத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு வழங்கும் பயிர் நிவாரணத் தொகை தவிர, பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையையும் பெற இயலும்.

டெல்டா பகுதிகளில்  பயிரிடப்பட்டுள்ள 12.86  லட்சம்  ஏக்கர் நிலங்களில் 11.01 லட்சம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது 86 சதவீத பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

5.48 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.  இந்த பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையாக விவசாயிகள் 44.81 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.  அதே போன்று, டெல்டா அல்லாத பகுதிகளில் 6.71 லட்சம் விவசாயிகள்  பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.

இந்த பயிர்க் காப்பீட்டுக்காக பிரிமியம் தொகையாக விவசாயிகள் 36.30  கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கு  பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான மாநில அரசின் பங்காக 410 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வரை இழப்பீடு தொகையாக பெற இயலும்.  இதர பயிர்களை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து இழப்பீடு பெற இயலும்.

பயிர் பாதிப்பு நிலைமைகளை நேரில் கண்டறிந்து உயர்மட்டக்குழுக்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படும் என்பதால், தற்போதுள்ள வறட்சி நிலை குறித்து விவசாயிகள் யாரும் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை.  அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு செவ்வனே நிறைவேற்றும்”.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்..