புதுச்சேரி,
மத்திய நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், விவசாய கிராம வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய பட்ஜெட்டில் விவசாயம் குறித்து அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் விதத்தில் அமைந்துள்ளது என்று கூறினார்.
ஏற்கனவே, கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வங்கிகள் வாயிலாக கடன் கொடுக்க ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அற்போது அத்துடன் ரூ.1 லட்சம் கோடி மட்டுமே சேர்க்கப்பட்டு ரூ.11 லட்சம் கோடியாக அறிவித்துள்ளனர்.
மேலும், விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் எந்தவித திட்டமும் இல்லை என்ற அவர், விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்காக எந்தவித திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்த பட்ஜெட்டைப் பொருத்தவரையில் விவசாயிகளுக்குத்தான் இந்த பட்ஜெட் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளாரே ஒழிய, பட்ஜெட்டை முழுமையாக படித்துப் பார்த்தால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வரும் என்றும் கூறினார்.
இதுமட்டுமின்றி, ரெயில்வே துறை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், வேலைவாய்ப்பை உருவாக்கும் எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த பட்ஜெட்டைப் பொருத்தவரை மருத்துவம், கல்வி, சாலை போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே ஒழிய மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றும் வகையிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.