எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்

Must read

சென்னை,

பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நடுத்தவர்க்கத்தினருக்கு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள  தமிழக பாமக தலைவர் ராமதாஸ், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள  வேளாண்துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே மக்களுக்கு மகிச்சியும், பயனும் அளிக்கும். மற்றபடி பட்ஜெட், இந்திய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

”நாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பொருட்கள் மற்றும் சேவை வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், நேரடி வரிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், வருமானவரி விலக்கு உச்சவரம்பு குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வரம்பு ரூ.3 லட்சமாகக் கூட உயர்த்தப்பட வில்லை. ஏற்கெனவே இருந்த ரூ.2.50 லட்சமாகவே இது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.40,000 வரை நிரந்தரக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மூத்தகுடிமக்களின் வட்டி வருவாய்க்கான வரி விலக்கு வரம்பு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும், ரூ.50 ஆயிரம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை என்ற போதிலும் இதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படாது.

அதேநேரத்தில் வருமானவரிகள் மீதான கூடுதல் தீர்வை 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டி ருப்பது வரிச்சுமையை அதிகரிக்கும். மாத ஊதியதாரர்களிடமிருந்துதான் நேரடி வரி வருவாய் அதிக அளவில் கிடைக்கும் நிலையில் அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்த சலுகையும் வழங்கப்படாதது நியாயமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இது பாதிக்கும்.

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அதிரடியான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், இந்தத் துறைகளின் அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மாற்றி மாற்றி படித்ததைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படும் என்றும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் பொருட்களுக்கான உற்பத்திச் செலவில் 50% லாபம் சேர்த்து 1.5 மடங்காக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

ஆனால், கொள்முதல் விலை உயர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவான அறிவிப்புகள் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. 22,000 கிராம வேளாண் சந்தைகள் அமைக்கப்படும் என்பது விவசாயிகளுக்கு பயனளிக்கும் அறிவிப்பாகும்.

சுகாதாரத்துறையிலும் சில பயனுள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப் பெரிய தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்துறை வளர்ச்சி, ஆராய்ச்சிக்கான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.38 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என்பதால் இந்த நிதியைக் கொண்டு புதிய அறிவிப்புகளை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெரியவில்லை.

கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டு 48,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை முழுமையாக செலவழித்த பிறகும் 56% பேருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதால் இந்த முறை அதை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வரிச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. புதிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கான ஊதியத்தில் 12 விழுக்காட்டை அரசே ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனாலும், மருத்துவத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்களாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் மகிழ்ச்சிதான்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் வேளாண்துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே, அதுவும் முறையாக செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு மகிச்சியும், பயனும் அளிக்கும். மற்றபடி நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை இந்திய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article