மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தொடங்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சுட்டெரித்து வந்த அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நெல்லை மாவட்டத் தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் அதிகபட்சமாக 106.4 டிகிரி வரை சென்றது. இதனால் வெப்ப சுழற்சி காரணமாக பலத்த இடி மின்னலுடன் சூறாவளி காற்றுடனும் அவ்வப்போது நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று மாலை நெல்லை மாவட் டத்தில் மேக மூட்டம் சூழ்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 36 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆய்க்குடியில் 33.2 மில்லி மீட்டரும், குண்டாறு பகுதியில்-28, ராமநதி-20, சிவகிரி -15 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவில், கருப்பாநதி பகுதியில் தலா 12 மில்லி மீட்டரும், அடவி நயினார்-9, தென்காசி-6.4, மணிமுத்தாறு-4.8 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையாபுரத்தில் 22 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 6 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதுபோக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குளிர்ந்த காற்று வீசி ஆங்காங்கே சாரல் மழை பெய்யத்தொடங்கி உள்ளது.

இந்த மழை காரணமாக வறண்டு கிடந்த பாபநாசம் அணைக்கு நீர்வரத் தொடங்கி உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் அதலபாதாளமான 9 அடிக்கு சென்றது. அணையின் உள்பகுதி வெடிப்பு விழுந்து, தேங்கிய சகதி தண்ணீரில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இந்த நிலையில் தற்போது மலைகளின் நீர் கசிவினால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 22.69 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை திறந்து வைக்கப்பட்டுள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 9.45 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணி முத்தாறு அணை நீர்மட்டம் 62.24 அடியாக உள்ளது. இது போல ராமநதி, கடனாநதிக்கும் வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே நதியில் திறந்து விடப்படுகிறது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 2வது வாரம் தொடங்கும். சில ஆண்டில் முன் கூட்டியே ஜூன் முதலிலேயே தென் மேற்கு பருவ மழை தொடங்கி விடும். அது போல தற்போது மழை பெய்து அணைகளுக்கு லேசாக தண்ணீர் வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதாலும், தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே ஜூன் முதலில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.