சென்னையில் மோடிக்கு கருப்புக்கொடி: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Must read

ஒக்கி புயல், விவசாயிகள் பாதிப்பு, காவிரி பிரச்சினை போன்றவற்றில் பிரதமரின் பாராமுகம் காட்டுவதைக குற்றம் சாட்டியுள்ள விவசாயசங்கங்கள், அவர் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டுவதுவதாக முடிவெடுத்துள்ளன.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.

இதன் பிறகும் மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை, பிரதமர், முதல்வர் நேரில் பார்வையிட்டும் விவசாயிகளுக்கு பாதிப்பிற்கேற்ப முழுமையான இழப்பீடுகள் அளிக்கப்படவில்லை. காணாமல் போன மீனவர்களுக்கு கேரளாவைப் பின்பற்றி உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை.

மேலும் அவர்கள் குறித்து உறுதியான தகவல்களும் வெளியிடவில்லை. காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பயிர்கள் கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கி விட்டன. அப் பயிரை காப்பாற்ற தண்ணீர் பெற்று தரவலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தியும் பிரதமர் கண்டுகொள்ளவே இல்லை. உச்ச நீதிமன்றம் காவிரி குறித்து அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது குறித்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனை கண்டித்து பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி சென்னை வரும்போது, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாலை 3 மணியாவில் கருப்புக்கொடி காட்டுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதை வரவேற்கிறோம். விவசாயிகளை அழைக்காதது வருத்தமளித்தாலும், இக்கூட்டம் காவிரி உரிமையை மீட்பதற்கு உரிய முடிவை உறுதியோடும், ஒற்றுமையோடும் வலிமையோடும் எடுக்கும் என நம்புகிறோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை முதல்வர் தலைமையில் அனைத்து தலைவர்களோடு வரும் 24-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த அனுமதி வழங்கப்பட்டால், கருப்புக்கொடி போராட்டம் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம்.” என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

More articles

Latest article