தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது,

நேற்று வரை மொத்தம் 981 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

வேட்புமனுவில் இவர்கள் அளித்திருக்கும் சொத்து குறித்த விவரங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட பிறகு சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் அவர் அளித்திருக்கும் விவரங்கள் அடிப்படையில் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மொத்தம் சுமார் ரூ. 2.01 கோடிக்கு அசையும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதுபோல், 2016 ம் ஆண்டு மொத்தம் 4.66 கோடி ரூபாயாக இருந்த இவரது அசையா சொத்தின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்ச ரூபாய் உயர்ந்து தற்போது மொத்தம் ரூ. 4.68 கோடியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்திற்கு பின் தன்னை ஒரு ‘விவசாயி’ என்று முன்னிலை படுத்திக்கொள்ள முனைப்பு காட்டி வரும் முதல்வர் பழனிசாமிக்கு சொந்தமாக விவசாய நிலமோ, வீட்டு மனையோ, வியாபார கட்டிடங்களோ எதுவும் இல்லை என்று கூறியிருப்பதோடு, பூர்வீக நிலம் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2016 ம் ஆண்டு 15.65 ஏக்கர் பூர்வீக விவசாய நிலம் தனது பெயரில் இருப்பதாக தெரிவித்திருந்த எடப்பாடியார், தற்போது இந்த பூர்வீக சொத்து, குடும்ப சொத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன் மனைவி பெயரில் சுமார் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர், விவசாய நிலங்கள் மூலம் 2018 – 19 ம் ஆண்டு மொத்தம் சுமார் 14.7 லட்ச ரூபாய் விவசாய வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கோபிச்செட்டிபாளையத்தில் களமிறங்கும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனக்கு மொத்தம் ரூ. 6.74 கோடிக்கு அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், மொத்தம் ரூ. 5.09 கோடிக்கு அசையா சொத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989 ம் ஆண்டு அ.தி.மு.க. வில் தீவிர பணியாற்றுவதற்கு முன், விவசாய பணி செய்து கொண்டிருந்ததாக கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அப்போதைய சேலம் மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் தான் பிள்ளையார் சுழி போட்டு அரசியல் களத்தில் இறக்கி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.