திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், விவசாயி ஒருவர் உயர்மின் கோபுரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கயம் அருகே உள்ள ராமபட்டிணம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. 75 வயது இவர் அந்த பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார்.

இவரது நிலத்தில் உயர்மின் கோபுரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்டது.  ஆனால், அதற்கான இழப்பீடு தொகை அவருக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும், சொற்பத் தொகை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி, அவரது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காங்கயம் போலீசார் உடலை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.