ஈரோடு: திமுக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு ஈரோட்டில்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய திமுக தலைவர், “பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் தமிழக அரசின் விவசாய விரோத சட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்பப் பெறப்படும் என உறுதி அளித்தார். 

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் இந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தேர்தலுக்கு முன்னால் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி பல கோரிக்கைகளை இங்கே நீங்கள் எடுத்து வைத்து இருக்கிறீர்கள். இந்த மாநாட்டில் பல தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறீர்கள். தேர்தல் முடிந்து நீங்கள் எதிர்பார்ப்பதை போல – நாம் எதிர்பார்ப்பது போல திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று, அதற்குப் பிறகு இன்னொரு மாநாட்டை நடத்தி அதற்கு நீங்கள் எல்லாம் கழக ஆட்சிக்கு நன்றி சொல்லுகிற ஒரு மாநாட்டை நடத்திட வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் இப்போதே ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்போது நான் ஒரு பெரிய பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். அதெல்லாம் உங்களுக்கு தெரியும். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற அந்த தலைப்பில் தமிழகம் முழுவதும், அந்த பயணத்திற்காக நான் மாவட்டம் மாவட்டமாக சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் மக்களை வரவழைத்து அவர்களுடைய கோரிக்கை மனுக்களை எல்லாம் பெற்று, அந்த பணியை ஆட்சி பொறுப்பேற்று, அதற்கு அடுத்த 100 நாட்களுக்குள் அதை நிறைவேற்றி தருவோம் என்ற வாக்குறுதியை, உறுதிமொழியை – வாக்குறுதி என்று சொல்வதை விட சத்தியத்தையே செய்து இருக்கிறேன். அதுவும் யார் மீது என்றால், அண்ணா மீது – கலைஞர் மீது – தமிழ் பெருங்குடி மக்கள் மீது அந்த சத்தியத்தை நான் செய்திருக்கிறேன்.
அதெல்லாம் உங்களுக்கு தெரியும். நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.
கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி தலைவர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் தமிழகம் முழுவதும் இருக்கும் ஊடகத் துறையினரை அழைத்து, பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களுக்கு முன்பு தான் அந்த சபதத்தை நான் ஏற்றுக் கொண்டேன் என்பது உங்களுக்கு தெரியும். அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதை எப்படி 100 நாட்களில் முடிப்பேன் என்று நான் சொல்லி இருக்கிறேனே, அந்தப் பயணத்திற்கு இடையில் தான் இந்த நிகழ்ச்சிக்கும் நான் வந்திருக்கிறேன். கொஞ்சம் அந்த நிகழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தான் என் மனதில் படுகிறது.
ஏனென்றால் இங்கே நீங்கள் கோரிக்கை வைத்து இருக்கிறீர்கள். நிச்சயமாக சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன். ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் இங்கே உங்களால் நிறைவேற்றப்பட்ட, உங்களால் வழங்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளாக இருந்தாலும், தீர்மானங்களாக இருந்தாலும், எது எது உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டுமோ, அதை நிச்சயமாக உறுதியாக 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன் என்ற அந்த உறுதியை நான் முன்கூட்டியே வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படி என்றால் மீதமுள்ளதெல்லாம் என்ன என்று நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம். அது உங்களுக்கே தெரியும். அதில் இருக்கும் பிரச்சினைகள், சட்ட சிக்கல்கள், அதற்குரிய வருவாய் – நிதி நிலைமை என்ன – எப்படி என்பது எல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது உங்களுக்கே தெரியும். அதற்கென்று அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, ஏன் உங்களில் பலரையும் அதில் இணைத்து நிச்சயமாக உறுதியாக அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக காத்திருக்கிறேன். தயாராக இருக்கிறேன் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
விவசாயிகளைப் பொறுத்தவரையில் பசிப்பிணி போக்கும் மருத்துவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் இதை அடிக்கடி குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான்” என்பது அவ்வையார் பாடிய பாட்டு.
ஆனால் இப்போது இந்த பாட்டை நினைக்கும் போது நமக்கு பிரதமர் மோடி தான் நினைவிற்கு வருகிறார். பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் இப்போது விவசாயிகளுக்கு செய்து கொண்டிருக்கும் அந்தப் பாவத்திலிருந்து தன்னை திசை திருப்புவதற்காக இந்த பாடலை எல்லாம் அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்தபோது பாடிக் இருக்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சி மாறப்போகிறது என்பதற்கு எவ்வளவோ சாட்சிகள், எவ்வளவோ தடைகள் இருந்தாலும் இன்றைக்கு உங்கள் மூலமாக கிடைக்கும் இந்த சாட்சிதான் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயப் பெருங்குடி மக்கள். எனவே உங்கள் மூலமாக இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நிரூபிக்கப்படப் போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நான் இந்த அழைப்பிதழை உற்று கவனித்தேன். தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் நடக்கின்ற மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு, இப்படித்தான் போட்டிருக்கிறது. நீங்களே அக்ரிமென்ட் போட்டுவிட்டீர்கள். ஆதரித்தும் போட்டு விட்டீர்கள். அதனால் எனக்கு வேலை குறைந்து விட்டது. உங்களிடம் ஆதரவு கேட்க வேண்டும். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எங்களுக்கு துணை நிற்க வேண்டுமென்று கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.
ஆனால் நீங்களே ஒரு முடிவு எடுத்து விட்டீர்கள். அதற்கு பிறகு நடைபெறும் மாநாடாக இது இருக்கிறது. அதனால் மீண்டும் ஒருமுறை உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு என்னுடைய நன்றியை வணக்கத்தை நான்தான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
விவசாய நில உரிமை காக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள். வாழ்வுரிமை காக்கப்படவேண்டும். வாழ்வாதாரம் வளர்க்கப்பட வேண்டும் என்ற அந்த கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிச்சயமாக விவசாயிகளின் நில உரிமை காக்கப்படும். வாழ்வாதாரம் காக்கப்படும் என்ற உறுதி மொழியை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்களுக்கே தெரியும் கலைஞரை பொறுத்தவரையில் 5 முறை முதலமைச்சராக இருந்த போது எத்தனையோ உதவிகளை, எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை, எத்தனையோ நன்மைகளை, அதிலும் குறிப்பாக விவசாயப் பெருங்குடிமக்கள் கேட்காமலேயே ஒரு துறைக்கு கலைஞர் பல நன்மைகள் செய்து இருக்கிறார் என்றால் அது விவசாயத்துறையாகத்தான் இருக்க முடியும்.
1970 – 1971-ல் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நன்றாக நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். குடியிருப்போர் மனை உரிமைச் சட்டம் வேண்டும் என்று நாடு முழுவதும் கிளர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 1970 – 1971ஆம் ஆண்டில் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அதை சட்டமாக்கி தந்தார். அதற்காக ஒரு பெரிய பாராட்டு விழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்றது. அந்தப் பாராட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த மணலியார் என்று அன்போடு அழைக்கப்படும் மணலி கந்தசாமி அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகிறபோது, இந்த விவசாயிகளின் மனை உரிமை சட்டத்திற்காக நாங்களெல்லாம் இரத்தம் சிந்தியும் கிடைக்காமல் இருந்த அந்த சட்டம், அந்தத் திட்டம் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுடைய ஒரு துளி பேனா மையினால் கிடைத்திருக்கிறது என்று பாராட்டி பேசினார்கள்.
மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில், 1989 – 1990களில் கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தினார்கள். என்ன காரணத்திற்காக என்று கேட்டால் மின்சார கட்டணத்தை இலவசமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அல்ல; அந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சொல்லி ஒரு போராட்டம் நடத்தினார்கள். அதுவும் எவ்வளவு என்று கேட்டால் ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று கேட்டார்கள்.
நாடு முழுவதும் அந்த போராட்டம் நடைபெற்றது. மறைந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் அந்த மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சியில் அவர் தாக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரலாறெல்லாம் உண்டு.
ஆனால் அன்றைக்கு இருந்த ஆட்சி ஏற்றுக்கொண்டதா? என்று கேட்டால் இல்லை. 1989களில் கலைஞர் முதல்வராக வருகிறார். 1989 – இல் சட்டமன்றத்தில் பேசினார். என்னிடத்தில் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. மனு கொடுக்கவில்லை. கோட்டைக்கு ஊர்வலம் வரவில்லை. போராட்டம் நடத்தவில்லை. மறியலில் ஈடுபட வில்லை. உண்ணாவிரதம் இருக்கவில்லை. எந்த கோரிக்கையும் வைக்காமல் இந்த நேரத்தில் நான் ஒரு திட்டத்தை அறிவிக்கிறேன் என்று கலைஞர் அவர்கள் அறிவித்தார்.
கடந்த காலத்தில் நீங்கள் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லிப் போராடினார்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் ஒரு பைசா கூட தர வேண்டிய அவசியம் இல்லை. இலவச மின்சாரம் என்று அறிவிப்பை கலைஞர் அவர்கள் அன்றைக்கு வெளியிட்டார்கள்.
அதேபோலத்தான் 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வரிசையாக, படிப்படியாக அறிவிப்பை வெளியிட்டோம். அதில் ஒரு முக்கியமான ஒரு வாக்குறுதி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று கலைஞர் அவர்கள் உறுதிமொழி தந்திருந்தார்.
அதை சிலர் நம்பவில்லை. விமர்சனம் செய்தார்கள். கேலி செய்தார்கள். கிண்டல் செய்தார்கள். அது எப்படி முடியும் என்றார்கள்.
அப்போது 7000 கோடி ரூபாயை எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என்று சிலர் கேட்டபோது, இல்லை இல்லை நான் உறுதிமொழி கொடுத்து விட்டேன். தள்ளுபடி செய்வேன் என்று ஒரு வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார். அதேபோல, ஆட்சிக்கு வந்து பதவியேற்றுக் கொண்ட சென்னை நேரு விளையாட்டு அரங்கிலேயே, இடத்திலேயே கோட்டையில் இருக்கும் கோப்புகளை மேடைக்கு வரவழைத்து அந்த விழா மேடையிலேயே 7000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கான கையெழுத்தை இட்டார். இதுதான் கலைஞர். இதுதான் தி.மு.க. ஆட்சி. கோரிக்கை வைக்காமலேயே கலைஞர் அதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறார் என்பதற்காகத்தான் குறிப்பிட்டுச் சொன்னேனே தவிர, வேறு எதுவும் அல்ல.
அதே போல நெல்லுக்கு ஊக்க விலை தரப்பட்டது. கரும்புக்கு உரிய விலை தரப்பட்டது. உணவு தானியக் கழகம் உருவாக்கப்பட்டது. ஏராளமான உணவு தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டது. இப்படி பல திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் 88வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. எதற்காக? மத்திய பாஜக ஆட்சி 3 வேளாண் சட்டங்களை சர்வாதிகார தன்மையோடு நாடாளுமன்றத்தில், விவாதம் கூட இல்லாமல், ஓட்டெடுப்பு கூட நடத்தாமல், குரல் வாக்கெடுப்பு என்ற ஒரு சர்வாதிகார தன்மையுடன் அந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதை திராவிட முன்னேற்றக் கழகம்தான் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அழுத்தமாக எதிர்த்துப் பேசியது. வாக்களித்தது. ஏன் உச்சநீதிமன்றத்தில் நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் வழக்குப் போட்டு இருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அதனால் உயிரிழந்திருக்கிறார்கள். இன்றைக்கு மேடையில் நாம் அவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கிறோம்.
ஆனால் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி என்ன சொல்லுகிறார் என்றால் – அவர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல, தரகர்கள் என்று ஒரு பட்டவர்த்தனமாக – கீழ்த்தரமாக – கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். எதற்காக? தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக, தங்கள் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அப்படிப் பேசி இருக்கிறார். இன்றைக்கு அவருடைய பிடி டெல்லியில் இருக்கிறது.
ஊழல் வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, போராடி வரும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் அவர், தன்னை ஒரு விவசாயி என்று அப்பட்டமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா? அவர் என்ன விவசாயியா? என்று கேட்கிறார்.
மிஸ்டர்.பழனிசாமி அவர்களே எனக்கு விவசாயம் தெரியாது. நான் விவசாயி அல்ல. ஆனால் எனக்கு மக்கள் மீது பாசம் உண்டு. இந்த மண்ணின் மீது எனக்கு பாசம் உண்டு.
தலைவர் கலைஞர் குளித்தலையில் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1957ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அவர் கன்னிப் பேச்சில் என்ன சொன்னார் தெரியுமா? விவசாயிகளுடைய நங்கவரம் போராட்டம் பற்றி தான் குரல் கொடுத்தார். அவருடைய மகன் நான். விவசாயிகளைப் பற்றி நான் பேச கூடாதா?
விவசாயத்தை பற்றி பேசுவதற்கு விவசாயியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நெஞ்சில் ஈரம் இருந்தால் போதும். அந்த ஈரம் இந்த ஸ்டாலினிடத்தில் இருக்கிறது.
மாநாடு என்றால் தீர்மானம் போடுவது, கோரிக்கைகள் வைப்பது இயல்புதான். கட்டாயம் அதை யாரும் மறுத்திட முடியாது. தீர்மானம் போட்டால் தான் அந்த மாநாட்டிற்கு சிறப்பு. இங்கும் தீர்மானங்கள் போட்டிருக்கிறீர்கள்.
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை படித்தார்கள். நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களைப் போல, தமிழக அரசு நிறைவேற்றி இருக்கும் விவசாய விரோத சட்டங்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே திரும்பப் பெறப்படும் என்ற உறுதியை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். கழக அரசு அமைந்ததும் அது நிறைவேற்றப்படும்.
அதுமட்டுமின்றி மத்திய அரசிற்கு இதற்கு முன்பே அ.தி.மு.க. அரசு தீர்மானம் போட்டு அனுப்பியிருக்கும் அந்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவது தான் தி.மு.க. ஆட்சியினுடைய வேலையாக இருக்கும்.
இலவச மின்சாரத்திற்கு பாதுகாப்பு சட்டம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இலவச மின்சாரம் கொடுத்த அரசுதான் தி.மு.க. அரசு. அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வரவேண்டிய அவசியமில்லை. நிச்சயம் தி.மு.க. அதற்கு துணை நிற்கும்.
நெல் விலை, கரும்பு விலை ஆகிய இரண்டும் விவசாயிகளுடன் கலந்து பேசி உரிய விலையை நிச்சயமாக வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது என்பது பற்றி கழக அரசு அதில் உறுதியாக இருக்கும். கரும்பு விவசாயிகளை பாதிக்கும் அ.தி.மு.க. அரசின் 2018ஆம் ஆண்டு சட்டம் நிச்சயம் வாபஸ் வாங்கப் படும் என்ற உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதை தொடர்ந்து பல கோரிக்கைகள் பல தீர்மானங்கள் இங்கே வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கோரிக்கைகளுக்காக ஒரு குழு அமைத்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். ஏதோ தனிப்பட்ட அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, உங்களை போன்ற நிர்வாகிகளையும், உங்களைப் போன்ற விவசாய அமைப்புகளையும் அழைத்து வந்து கலந்து கொள்ள வைத்து, அந்த கொள்கை முடிவுகளை நிச்சயமாக அறிவிப்போம்.
பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி இருக்கும் விவசாயிகளை அழைத்து பேசி நிச்சயமாக எந்த முடிவாக இருந்தாலும், உடனுக்குடன் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசித்தான் முடிவெடுக்கப்படும். விவசாய சங்கங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை கேட்டு அரசின் வேளாண்மை அறிக்கை வடிவமைக்கப்படும். மொத்தத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மண்ணைக் காக்கும் மக்களின் அரசாக நிச்சயம் அமையும்.
அதற்கான அரசியல் வெற்றியை வழங்குவோம் என்று மேற்கு மண்டலத்தில் இருக்கும் நீங்கள் முடிவு எடுத்திருக்கிறீர்கள். கோரிக்கை வைத்த உங்களிடத்தில் நான் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறேன். மேற்கு மண்டலத்தோடு நிறுத்திவிடாமல் எல்லாம் மண்டலத்தில் இருக்கும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த மாநாட்டின் நோக்கத்தை சுட்டிக்காட்டி வரவிருக்கும் தேர்தலில் நம்முடைய கடமையை என்ன என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பங்களிப்பை நீங்கள் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நான் உங்களிடத்தில் எடுத்து வைத்து, இந்த சிறப்பான மாநாட்டில் கலந்துகொள்ள நல்ல வாய்ப்பு எனக்கு ஏற்படுத்தி தந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.