சேலம்: இளைய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் யுடியூபர் சாப்பாட்டு ராமன். இவர்மீது கொரோனாவுக்கு மருத்துவம் பார்த்ததாக எழுந்த புகாரையடுத்து கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுக்கப்பட்டு உள்ளார். இவருக்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர்.
சித்த மருத்துவரான பொற்செழியன் எனப்படும் சாட்பாட்டு ராமனை , கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அலோபதி மருந்து பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அலோபதி சிகிச்சை வழங்கியதாகவும் குற்றம் சாட்டுப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் , கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக் குட்டப்பட்ட கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பொற்செழியன் (வயது 60 ). இவர் சித்த மருத்துவர் ஒன்று ஒரு தரப்பினரும், சிலர் ஹோமியோபதிமருத்துவர் என சில தரப்பினரும்கூறி வருகின்றனர். இவர் தனது சொந்த ஊரான கூகையூரில் அய்யப்பன் கிளினிக் என்ற பெயரில் கிளினிக் வைத்து கடந்த 28 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார் .
விதம் விதமாக சாப்பிடுவதில் அலாதி பிரியம் கொண்ட இவர், ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று , அங்குள்ள பிரபலமான உணவுகளை வயிறுமுட்ட சட்டி சட்டியாக சாப்பிடுவதையும், ஒரே நேரத்தில் கிலோ கணக்கில் உணவு உண்டு அதை தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேலஞ் செய்து அதையே வீடியோவாக தனது சாப்பாட்டு ராமன் சேனலில் அப்லோட் செய்து மிகவும் பிரபலமானவர் பொற்செழியன். இதற்காகவே ‘சாப்பாட்டு ராமன்’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார் .
கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தொடங்கிய அவரது யூடியூப் சேனலுக்கு தற்பொழுது 1 .04 மில்லியன் அதாவது 10 லட்சத்து 40 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர் .
கடந்த சில மாதங்களாக இவர் சாப்பாடு ஜீரணமாகும் டானிக் ஒன்றைக் கூட தானே உற்பத்தி செய்து அதனை ஆன்லைன் மூலம் விற்பனையும் செய்து வருகிறார். அதன் மூலம் பல லட்சம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இவரது வீடியோ ஏதும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், மக்கள் கொரோனாவால்பாதித்து கொண்டிருக்கையில் நான் மட்டும் சாப்பிட்டு கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது அதனால்தான் வீடியோ போடவில்லை என்று கூறியதுடன், கொரோனாவில் இருந்து தற்காத்துகொள்ளும் வகையில் மக்களுக்கு சில டிப்ஸ்களை வழங்கியிருந்தார். அது பொதுவான ஆங்கில மருத்துவம் குறித்து டிஸ்ஸ் என்று கூறப்படுகிறது. சித்த மருத்துவரான இவர் எப்படி ஆங்கில மருத்துவம் குறித்து கூறுவது என அவர் புகார் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது சிகிச்சை மையத்திற்கு சுகாதாரத்துறையினர் சென்று விசாரணை நடத்தியதாகவும், அப்போது, அவர் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது தெரியவந்தது. ஆயுஷ் மருத்துவரான சாப்பாட்டு ராமன், ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது சட்டப்படி குற்றம் என்பதால், சுகாதார துறையினர் கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
விரைந்து வந்த காவல்துறையினர், பொற்செழியன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவரது கிளினிக்கில் இருந்து ஊசிகள் , தையல் போட பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் , அடிபட்ட காயங்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள் , கத்திரிக்கோல் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய கீழ்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் , ‛‛குற்றவாளி பொற்செழியன் மீது இந்திய தண்டனை சட்டம் 420 மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம்பிரிவு 15 (3) வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியதாகவும், ஆனால், வயது மூப்பை காரணம் காட்டி, அவரது வழக்கறிஞர் மனுசெய்ததின் பேரில் பொற்செழினை சொந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.