போபால்

பிரபல மல்யுத்த  வீராங்கனை ராணி ராணா தம்மை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்  பல மல்யுத்த போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ள இவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது குவாலியர் மாவட்ட காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரில் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வருவதாகவும், சில நேரங்களில் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.தவிர வரதட்சணை தரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர் என கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த அவர்,

‘எனக்குக் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எனது தந்தை கடன் வாங்கி எனது திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த 6 மாதம் வாழ்க்கை சுமுகமாகச் சென்றது. அதன் பின் எனது கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்தத் தொடங்கினர்.

வரதட்சணை போதவில்லை என, எனது தந்தையிடம் கேட்டு மேலும் வாங்கி வா என்று நச்சரிக்கத் தொடங்கினர். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைக் கூட அடித்துத் துன்புறுத்தாத இந்த காலத்தில் எனது கணவர் என்னைப் பலமுறை அடித்துத் துன்புறுத்தினார்.

கடைசியாக இந்த மே மாத இறுதியில் என்னை அடித்து உனக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டார். வரதட்சணை வாங்கி வா இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேறு எனக் கூறுகின்றனர். மேலும் எனது மல்யுத்த கனவிற்கும் தடங்கலாக இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் எனக்கு அரசாங்கம் தான் உதவ வேண்டும்’

என்று கூறியுள்ளார்.