சென்னை: பிரபல தமிழ் கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் (வயது 86) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று  காலை 9:33 மணியளவில் உயிரிழந்தார்.

புலவர் புலமைப்பித்தன் 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியரான  இவரது இயர்பெயர் ராமசாமி.  இவர்  சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.

பள்ளி இறுதி வகுப்பில் படித்து முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு 12 ஆண்டுகள் தமிழாசிரியராக நெல்லை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார்.

எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் “நான் யார், நான் யார்” என்ற பாடலை எழுதியதன் மூலம் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான  எம்ஜிஆர் நடித்த பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதி வந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து, பணியாற்றி வந்த நிலையில், அவைத்தலைவராகவும்பதவி வகித்தார்.  அ. தி. மு. க. ஆட்சிக்கு வந்தபிறகு, 1978-ம் ஆண்டு, இவர் மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவர் சினிமாவுக்கு பாடல்கள் எழுதியது மட்டும் அல்லாமல், “புரட்சித்தீ”, “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” ஆகிய கவிதை புத்தகங்களையும், “எது கவிதை” என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” புத்தகம், சென்னை பல்கலைக்கழக எம். ஏ. வகுப்புக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டு உள்ளது.

வயது முதிர்வு காரணமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி வந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” திரைப்படத்தில் இடம்பெற்ற தாய்மை பாடலையும் எழுதியுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்   கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகிகள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். நேற்று சசிகலா அவரை சென்று பார்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.