சென்னை:
ல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ரங்கம்மாள் பாட்டி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1967ல் வெளி வந்த விவசாயி திரைப்படத்தில், தயாரிப்பாளர் சின்னப்பா தேவரால் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் வரை பல நடிகர்களுடன் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த ஒரு திரைப்படத்தில், “போறது தான் போற ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ” என ஒரு பாட்டி சொல்லும் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவினால் கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் ரங்கம்மாள் உயிரிழந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் ரங்கம்மாளின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.