சென்னை: குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதனை வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில், தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்  தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி,  சக்கரபாணி மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன்,   ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும்.அப்பொருட்களின் தரத்தை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும்,  கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்,மகளிர் தொழில்முனைவோர், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளி கள், உள்ளிட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்கிட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை முழுவதுமாக கணினிமயமாக்குதல்.மேலும், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருதல்  போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள டிவிட்டில்,  தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து, பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்குவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார் என தெரிவித்து உள்ளார்.