ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிராக 77.8% செயல்திறன் கொண்டுள்ளது பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசி என்று அதன் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. மேலும்,  உறுமாறிய டெல்டா வைரசுக்கு எதிராக கோவாக்சின் 65.2 சதவிகிதம் பாதுகாப்பு வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை முடிவு நேற்று வெளியானது. அதில், இந்தியாவின் மிகப்பெரிய செயல்திறன் சோதனை என்று என்று சுட்டிக்காட்டியிருப்பதுடன், கொரோனா நோயாளிகளக்கு எதிராக 77.8% ஒட்டுமொத்த செயல்திறனை  வழங்குகிறது என்று கூறியுள்ளது.

அதேபோல டெல்லா வேரியன்ட் வைரசுக்கு எதிராக 65.2 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளது என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. அதேபோல தீவிர கொரோனா தொற்று அறிகுறிகளுக்கு எதிராக 93.4 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும், அறிகுறிகளற்ற கொரோனா தொற்றுக்கு எதிராக 63.6 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 25 நகரங்களில், 130 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வெளிவந்துள்ளது. கோவாக்சின் 2ம் தவணை செலுத்தி 2 வாரங்களுக்கு பின்னர் இந்த முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடக் நிறுவனமானது ஐசிஎம்ஆர் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.