சென்னை: தவறான தகவல்களை பரப்பியதாக, சேவா பாரதி அறக்கட்டளை சார்பில்,  கருப்பர் தேசம் யூ-டியூப் சேனல் மீது தொடரப்பட்ட வழக்கில்,   கருப்பர் தேசம்யூ-டியூப் சேனல் நிர்வாகம், சேவா பாரதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றன. அதுபோல சில சேனல்கள்  ஒரு மதத்திற்கு எதிரான செய்திகளையும் வெளியிட்டு மக்களிடையே சாதி மத மோதல்களை தூண்டும் வகையில் அவ்வப்போது பரபரப்பு  நிகழ்வுகளை வெளியிட்டு மக்களை துன்புறுத்தி வருகின்றன.  அதுபோன்று  ஒரு அமைப்புமீது  தவறான தகவல்களை கூறி வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக, கருப்பர் தேசம்  யூ-டியூப் சேனல்மீதான வழக்கில், அவர்கள் வெளியிட்ட வீடியோ  தகவல் பொய்யானது  என உறுதியான நிலையில், அந்த சேனல் நிர்வாகம் பாதிக்கப்பட்ட அமைப்புக்கு  ரூ.1 கோடி  நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சாத்தான் குளம் தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கருப்பர் தேசம் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், சேவா பாரதி தமிழ்நாடு அறக்கட்டளை மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை  தெரிவித்திருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, சேவா பாரதி தமிழ்நாடு அறக்கட்டளை  தலைவரான வழக்கறிஞர் ரபு மனோகர், சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஆர்எஸ்எஸ்-ன் அங்கமான எங்களது சேவா பாரதி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகிறோம். இதனால் எங்கள் அமைப்புக்கு, மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. இந்த நிலையில், ‘கருப்பர் தேசம்’ என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வரும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், சேவா பாரதி அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் போலீஸாரால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்குடன் சேவாபாரதி அமைப்பை தொடர்புபடுத்தி, பொய் தகவலைப் பரப்பி வீடியோ பதிவிட்டுள்ளார். எனவே, அவர் எங்கள் அமைப்புக்கு 1 கோடியே ஆயிரம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை   நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்து வந்தார். பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கினால், தீர்ப்பில்இ, “மனுதாரர் கோரியுள்ள ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை நஷ்டஈடாக, வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 6 சதவீத வட்டியுடன் ‘கருப்பர் தேசம்’ யூ-டியூப் சேனலை நிர்வகித்து வரும் சுரேந்திரன், சேவா பாரதி அறக்கட்டளை அமைப்புக்கு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டதுடன், சேவா பாரதி அமைப்பு குறித்து சுரேந்திரன் பேசுவதற்கு தடை விதித்தார்.