பவழக்குன்று மலையில் நித்தியானந்தா சீடர்கள்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கேவியட் மனுவில் முரண்பட்ட தகவல் அளித்த நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு, மதுரை ஆதின மடம் கைப்பற்ற முயற்சி, சென்னை பம்மல் அருகே மலையை அபகரிக்க முயற்சி  உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கேவியட் மனுவில் போலியாக கையெழுத்திட்டதாக நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பவழக்குன்று மலைப்பகுதியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு  நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு குடில் அமைத்து, பூசைகள் நடத்த தொடங்கினார்.

இது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருவண்ணா மலை போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் நகர மறுத்து வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், பவழக்குன்று மலையில் தான் ஆசிரமம் அமைக்கும் விவகாரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் எந்தவிதமான மனு குறித்தும் தனக்கு தகவல் தெரிவித்து கருத்து கேட்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி மகிழேந்தி, கேவியட் மனுவில் உள்ளது நித்யானந்தா கையெழுத்து தானா என்பதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதை யில் தனக்கு ஆதீனம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெங்களூரில் உள்ள நோட்டரி பப்ளிக் முன் கையெழுத்திட்டது ஏன் என்பதை விளக்கவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

அத்துடன் நித்தியானந்தாவின் பெங்களூர் முகவரி எதுவும் மனுவில் முறையாக குறிப்பிடப்படாததையும் ஏற்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

தவறான விவரங்களை அளித்து ஆதாயம் அடைய, நித்யானந்தா முயற்சித்திருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது என குறிப்பிட்ட நீதிபதி, இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.