சென்னை:

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி முதன்முறையாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற  தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக வெள்ளப்பாதிப்புகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அதையடுத்து,   எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார்.

கோபாலபுரம் வந்த பிரதமரை ஸ்டாலின் வரவேற்ற காட்சி

பின்னர் அவர் டெல்லி செல்வதற்கு முன்னர் கோபாலபுரம் வந்தார். கோபாலபுரத்திற்கு பிரதமர் வருவதற்கு முன்னதாக அவரை வரவேற்பதற்காக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கோபாலபுரம் வந்தார். சரியாக 12.15 க்கு பிரதமர் தனது குண்டு துளைக்காத கறுப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில் கோபாலபுரம் வந்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உடன் வந்தனர்.

கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த பிரதமரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவரது உடல் நலத்தைக் கேட்டறிந்தார். மோடி வந்ததை மு.க.ஸ்டாலின் கருணாநிதி காதில் கூறினார்

மோடி கருணாநிதியின் தோளில் கைவத்துப் பேசினார். பின்னர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டார். மோடி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கருணாநிதியை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமருக்கு முரசொலி பவழ விழா மலரை கருணாநிதி பரிசாக வழங்கினார். அப்போது, கருணாநிதியை டில்லிக்கு வந்து  ஓய்வு எடுக்க வருமாறு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி

சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் சரியாக 12.30 மணிக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார். அவரை வாசல்வரைவந்து கருணாநிதி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

இந்த சந்திப்பின்போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., துரைமுருகன் உள்பட மூத்த தலைவர்கள் மற்றும், பாஜ தமிழ்நாடு தலைவர் தமிழிசை  உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.