டில்லி

’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரான ரெயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக பொய் செய்திகள் வைரலாகி வருகின்றன.

முகநூலில் ”நாங்கள் நரேந்திர மோடியை ஆதரிக்கிறோம்” (WE SUPPORT NARENDRA MODI) என்னும் பெயரில் ஒரு பக்கம் உள்ளது .   அதில் பல்விந்தர் ஹரித் என்பவர் ஒரு செய்தியை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.  அந்த செய்தியில் இந்தியில், “மீண்டும் நமோ.  எனது பிரதமர், எனது பெருமை.   எனது பிரதம சேவகரின் வெற்றிக்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.  மேக் இன் இந்தியாவின் கீழ் தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.   மேக் இன் இந்தியா ஒளிர்கிறது” என பதிந்துள்ளார்

இந்த பக்கத்தில் 29 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.   இந்த பதிவை அவர்களில் பலரும் பதிந்ததால் பதிவு வைரலாகி உள்ளது.  இந்த பதிவுகளில் உள்ள ஒரு புகைப்படத்தில் ஒரு விமானத்தில் இருந்து இந்த பெட்டிகள் கீழே இறக்கப்படுவது போல் அமைந்துள்ளன.  அந்த விமானத்தில் ஆண்டனோவ் என பெயர் காணப்படுகிறது.

இது குறித்து இந்தியா டுடே பத்திரிகையின் செய்தியில், “நாங்கள் ஆண்டனோவ் விமானம் மூலம் ரெயில் பெட்டிகள் அனுப்பப்பட்டது குறித்து ஆய்வு செய்தோம்.  அப்போது சீன செய்தி ஊடகம் ஒன்றில் ஜெர்மனியில் தயாரான மெட்ரோ ரெயில் பெட்டிகள் சீனாவுக்கு அனுப்பப்பட்டது என ஒரு செய்தி காணப்பட்டது.  கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அந்த செய்தியில் இதே புகைப்ப்டம் காணப்படுகிறது.

மற்றொரு புகைப்படத்தில் பிளாஸ்டிக் பேப்பரினால் ரெயில் பெட்டிகள் மூடப்பட்டுள்ளது தெரிகிறது.  அந்த புகைப்ப்டத்தை ஆய்ந்ததில் அது மும்பை மெட்ரோ ரெயில் பெட்டி என தெரிய வந்துள்ளது.   இந்த பெட்டியின் கதவில் ரிலையன்ஸ் மெட்ரோவில் சீல் தெரிகிறது.   இந்த பெட்டிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு  இந்தியாவுக்கு  அனுப்பப்பட்டவைகள் ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanx : India today